

மதுரை: மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம், அதன் தலைவர் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், இணைத் தலைவர் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் விமான நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர், சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். இரு தரப்பு ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வாரத்துக்கு 3 நாட்கள் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அக்.22 முதல் தினமும் இயக்கப்பட உள்ளது. ஓடு பாதை விரிவாக்கத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசின் முயற்சியால் முடிந்துள்ளது. 2 குளங்களின் சிறு பகுதி மட்டும் வகை மாற்றம் செய்யும் வேலைகளும் விரைவில் முடிந்துவிடும்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 24 மணி நேர விமான நிலையமாக செயல்படும் என்று விமானத்துறை அறிவித்த அறிவிப்பு தற்போது வரை நடைமுறைப் படுத்தவில்லை. மேலும் போதிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லை என்பது அபத்தமான காரணம். சுரங்கப் பாதை அமைக்க ரூ.600 கோடி செலவாகும் என தடை போடுகின்றனர்.
இது தொடர்பாக தென் மாவட்ட எம்.பி-க்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.