Published : 12 Jan 2018 09:40 AM
Last Updated : 12 Jan 2018 09:40 AM

தினகரன் ஆதரவாளர்கள் 103 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் 103 பேரை நீக்கி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன. அதன்பின், செப்டம்பர் 12-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினர். சசிகலா ஆதரவாளர்கள் பலர் கட்சியில் இருந்தபோதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 2 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர்களது கட்சிப்பதவிகள் மட்டும் பறிக்கப்பட்டன.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான எஸ். அன்பழகன் உட்பட அம்மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏவும் கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான மா.பா.ரோகிணி என்ற கிருஷ்ணகுமார் உட்பட 6 பேரும், நீலகிரி மாவட்டத்தில் 30 பேரும் சேலம் புறநகர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏ எஸ்.சி.வெங்கடாசலம் உள்ளிட்ட 38 பேர் என 103 பேர் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகவும் அதனால் நீக்கப்பட்டதாகவும் இவர்களுடன் கட்சியினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x