Published : 11 Oct 2023 04:10 AM
Last Updated : 11 Oct 2023 04:10 AM

மணப்பாறை அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து அமோனியம் குளோரைடு வெளியானதால் மக்கள் அவதி

மணப்பாறை அருகே நேற்று பாய்லர் வெடித்ததில் சிதிலமடைந்து காணப்படும் தனியார் பால் நிறுவனம்.

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறவனூரை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையோரத்தில், திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள முருகவேல் நகர் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த வரதராஜன் (66) என்பவருக்குச் சொந்தமான தனியார் பாக்கெட் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அமோனியம் குளோரைடு நிரப்பப்பட்டிருந்த 1.5 டன் கொள்ளளவு கொண்ட பாய்லர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில், பால் நிறுவன கட்டிடம் பலத்த சேதமடைந்தது. நிறுவனத்தின் அருகில் இருந்த மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களில் இருந்த மின் கம்பிகளும் அறுந்து கீழே விழுந்தன.

மேலும், மேற்கூரை மற்றும் பாய்லரின் பாகங்கள் நூறு மீட்டர் தொலைவுக்கு சிதறிக் கிடந்தன. பாய்லர் வெடித்து வெளியேறிய அமோனியம் குளோரைடு காற்றில் பரவியதால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற மணப்பாறை காவல் ஆய்வாளர் ஜெ.கே.கோபி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். வருவாய்த் துறையினரும் விபத்து நேரிட்ட நிறுவனத்தை பார்வையிட்டனர். அதிக வெப்பத்தில் பாய்லர் வெடித்ததா? அல்லது மின்கசிவால் ஏற்பட்ட விபத்தா என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிறுவனத்தில் காலை 7 மணிக்கு பின்னரே பணியாளர்கள் பணிக்கு வருவார்கள் என்பதால், இந்த விபத்து நேரிட்ட போது யாரும் பணியில் இல்லை.இந்த விபத்தால் அப்பகுதியில் உள்ள 5 கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் மின் தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x