ஆவடி மருத்துவமனை கட்டுமானம் நீடிக்கும் பணிகளால் நீளும் திட்ட செலவு: விரைந்து முடிக்க கோரிக்கை

ஆவடி புதிய ராணுவ சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டிடம்.
ஆவடி புதிய ராணுவ சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டிடம்.
Updated on
2 min read

சென்னை: ஆவடியில் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காததால் திட்ட மதிப்பீடு மேலும் ரூ.18 கோடி அதிகரித்துள்ளது. எனவே, மருத்துவமனையை காலம் தாழ்த்தாமல் விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, புதிய ராணுவ சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு ஆவடி மட்டுமின்றி பட்டாபிராம், பருத்திப்பட்டு, வீராபுரம், மிட்னமல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துபொதுமக்கள் தினசரி வந்து சிகிச்சைப் பெற்று சென்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, இந்த மருத்துவமனை ரூ.2.75 கோடி செலவில் கடந்த 2010-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. 57 படுக்கை வசதிகளுடன் கூடிய மகப்பேறு பிரிவு,புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

எனினும், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சில மருத்துவ சிகிச்சைகளுக்காக பொதுமக்கள் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகள் அல்லது திருவள்ளூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, விபத்து, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழப்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கீழ்ப்பாக்கம் அல்லது திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. 2 மருத்துவமனைகளும் ஆவடியில் இருந்து தலா 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளன.

இதையடுத்து, ஆவடி அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து, ஆவடி பொது மருத்துவமனை வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் புதிய மருத்துவமனை கட்ட கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டின் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதியுதவி மூலம் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், 2021 மே மாதம்கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

திட்ட மதிப்பீடு ரூ.20.01 கோடி ஆகும். 54,778 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களை கொண்டு எழுப்பப்படும் இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை 15 மாதங்களுக்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது.

தரை தளத்தில் அவசர சிகிச்சை மற்றும் மருந்தகம், முதல்தளத்தில் 30 படுக்கை வசதிகளுடன் பெண்கள் வார்டு மற்றும் அலுவலகம், 2-ம் தளத்தில் 30 படுக்கை வசதிகளுடன் ஆண்கள் வார்டு மற்றும் ரத்த வங்கி, 3-ம் தளத்தில் சிகிச்சை அளிக்கும் வசதியும் அமைக்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணி முடியாததால் தற்போது திட்டமதிப்பீடு அதிகரித்துள்ளது.

ஏ.தரணிதரன்
ஏ.தரணிதரன்

இதுகுறித்து, ஆவடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.தரணிதரன் கூறியதாவது: ஆவடி, மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இங்குவசிக்கும் மக்களுக்கும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளது போன்று அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெறும் வசதியைஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம்.அதன் விளைவாக தற்போது ஆவடி மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இக்கட்டிடம் கட்டத் தொடங்கும்போது திட்ட மதிப்பீடு ரூ.20 கோடியாக இருந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் அதாவது, 15 மாதத்துக்குள் பணிகள் நிறைவடையாததால், பணிக்காலம் கடந்த மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல், திட்டமதிப்பீடும் ரூ.37.90 கோடியாக அதிகரித்தது. அதாவது, ரூ.18 கோடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கட்டிடப் பணி வரும் 2024 ஜுலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமதிப்பீடு மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. பொதுமக்களின் நலன் கருதி இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த மருத்துவமனை கட்டிடத்தை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு தரணிதரன் கூறினார்.

இதுகுறித்து, சுகாதார துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆவடி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. சிலநிர்வாக காரணங்களால் எஞ்சிய பணிகளை முடிக்க கால தாமதம்ஏற்பட்டது. எனினும், தற்போது நீட்டிக்கப்பட்ட காலத்துக்குள் இப்பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in