Published : 10 Oct 2023 02:35 PM
Last Updated : 10 Oct 2023 02:35 PM
சென்னை: `இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பது குறித்தும், பாதாள சாக்கடை திட்டத்தின் இயந்திர நுழைவு வாயில் மூடிகள் ஏற்றத்தாழ்வுடன் அமைக்கப்படுவது குறித்தும் `இந்து தமிழ் திசை' நாளிதழில் "குலுங்க வைக்கும் கொளத்தூர் சாலைகள்: பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள கோரிக்கை" என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியானது. மேலும், அதில் "மக்கள் பயன்பெறும் வகையில் சமமான தளத்தில் தரமான சாலைகள் அமைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்செய்தி வெளியான நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கொளத்தூர் தொகுதிக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு செய்தார். அந்த பணிகள் குறித்தும், நாளிதழ் செய்தியில் குறிப்பிட்டுள்ள குறைபாடுகள் குறித்தும் மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், திரு.வி.க.நகர் மண்டல அலுவலர் முருகன், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
அப்போது, திம்மசாமி தர்கா சந்து உள்ளிட்ட பகுதிகளில் சாலை உயரத்துக்கு மேல் உயர்த்தி அமைக்கப்பட்டிருந்த இயந்திர நுழைவு வாயிலை ஒரு வாரத்தில் தரை மட்டத்துக்கு அமைக்குமாறு குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இன்றியும், பாதுகாப்புடனும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி அறிவிப்பு: கொளத்தூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலை பணிகள் குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொளத்தூர் பகுதியில் மூலதன நிதியின் கீழ் ரூ.17 கோடியே 39 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்றுள்ளன. மேலும்கொசஸ்தலையாறு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் சுமார் ரூ.72 கோடியில் 24.50 கி.மீ .நீளத்தில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61 கோடியில் 83 கி.மீ. நீளத்துக்கும் 541 சாலைகள் அமைக்கும் பணிகளில், ரூ.28 கோடியில் 42 கி.மீ. நீளத்துக்கு 302 சாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த சாலை பணிகளை மேற்கொள்ளும்போது, சாலையின் மட்டத்தை சரி செய்து, மழைநீர் வடிகாலை நோக்கி மழைநீர் செல்லும் வண்ணம் சாலையை அமைக்க, ஆய்வின்போது அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்று வரும் சாலை பணிகளின் தரத்தை உறுதிப்படுத்த 3-ம் நபர் ஒப்பந்ததாரர் மூலம் ஆய்வு நடத்தி தரத்தை உறுதிப்படுத்திய பின்னரே ரசீதுகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT