ரூ.2,893 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப்படம்
அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள், ரூ.2,893.15 கோடி நிதி ஒதுக்க வழிவகை செய்கின்றன. 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்த பிறகு, புதிய பணிகள் மற்றும் புதிய துணை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதற்கு, பேரவையின் ஒப்புதலை பெறுவதும், எதிர்பாராச்செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் இந்த துணை மானிய கோரிக்கையின் நோக்கம் ஆகும்.

மாநில பேரிடர் தணிப்பு நிதியின்கீழ், சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகள், கடலூர் மாநகராட்சிக்கு மழைநீர் வடிகால் அமைக்க அரசு ரூ.304 கோடி அனுமதித்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, திருச்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு பங்கு மூலதன உதவியாக ரூ.175.33 கோடி அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட 1.85 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண உதவி வழங்க ரூ.181.40 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுவனங்களின் ஊழியர்களின் நிலுவையை தர, மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழிவகை முன் பணமாக ரூ.171.05 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடல் நகர்ப்புற புத்துணர்வு, நகர்ப்புற மாற்றங்களுக்கான ‘அம்ருத்’ இயக்கத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்த மாநில, மத்திய அரசின் பங்காக ரூ.893.23 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

2013 தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநிலத்துக்குள் உணவு தானியங்களை கையாளுதல், விநியோகித்தல், நியாயவிலை கடைகள் மற்றும் முகவர்களுக்கான லாபம் ஆகியவற்றுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பங்காக ரூ.511.84 கோடியை அரசு அனுமதித்துள்ளது. ‘தொழில் 4.0’ தரநிலையை அடையும் நோக்கில் 45 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை சீர்மிகு மையங்களாக தரம் உயர்த்த ரூ.277.64 கோடி, அடையாறு நதி மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.139.44 கோடிக்கு அரசு கூடுதல் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in