

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலை சீரான பிறகு, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்துஇந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அவரது உடல்நிலை சீரான பிறகு, பிற்பகலில் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் புழல்சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.