

சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடி, கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மற்றும் குடும்பத்தினர் மீது கடந்த 2002-ல் அதிமுக ஆட்சியின்போது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை விசாரித்த வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோரை விடுவித்தது.
வேலூர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து, அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரன் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு பொன்முடி தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி, விசாரணையை அக்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.