

மதுரை: மண் கடத்தல் குறித்து புகார்அளிப்பவர்களை அச்சுறுத்துவது கடுமையான குற்றம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது:
முசிறி அருகே சிட்டிலரை ஏரியில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண்கடத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஊராட்சித்தலைவர் பாலகுமார், டெல்லிகுமார் மீது போலீஸில் புகார் அளித்தேன். இதனால் என் வீடு மீதுதாக்குதல் நடத்தப்பட்டது. என்னையும், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸில் புகார்அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஏரியில் சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்து டிப்பர் லாரிகளில் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள்எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘மண்கடத்தல் குறித்து புகார் அளிப்பவர்களை மிரட்டுவதும், அவர்களின் வீடுகளை சேதப்படுத்துவதும் கடுமையான குற்றமாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. மனு தொடர்பாக திருச்சிமாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.