கலவரமும், கல்வீச்சு சம்பவங்களும் வெகுவாக குறைந்துவிட்டன: ஜம்மு-காஷ்மீர் தற்போது சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த மாநிலம் - சென்னையில் ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறை செயலாளர் கருத்து

கலவரமும், கல்வீச்சு சம்பவங்களும் வெகுவாக குறைந்துவிட்டன: ஜம்மு-காஷ்மீர் தற்போது சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த மாநிலம் - சென்னையில் ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறை செயலாளர் கருத்து
Updated on
2 min read

“ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பற்ற மாநிலம் என்னும் பார்வை தவறானது” என அந்த மாநில சுற்றுலாத் துறை செயலாளர் சர்மாத் ஹபீஸ் தெரிவித்தார்.

1989-ம் ஆண்டுக்குப் பிறகு உருவான தீவிரவாத தாக்குதல்கள், பிரிவினைவாத கலவரங்கள் போன்றவற்றால் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெரியளவில் சரிவடைந்தது.

இந்நிலையில், சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் அமைதி நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே, காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டும் பணிகளில் அம்மாநில அரசு இறங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழக சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறை உயரதிகாரிகள் அண்மையில் சென்னை வந்திருந்தனர். அப்போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறை செயலாளர் சர்மாத் ஹபீஸ் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை எப்படி இருக்கிறது?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தாண்டு தென்னிந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இது கடந்த ஆண்டில் 2 லட்சமாக இருந்தது. குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வருகின்றனர்.

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களும், கலவரங்களும் அடிக்கடி நடப்பதால் உங்களுடைய மாநிலத்துக்கு சுற்றுலா வருவதற்கு பலரும் தயக்கம் காட்டுவதாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனரே?

நீங்கள் நினைப்பது போன்று காஷ்மீர் ஒன்றும் கலவர பூமி கிடையாது. எங்கோ ஒரு எல்லையில் துப்பாக்கி சூடு நடக்கிறது. சில குறிப்பிட்ட இடங்களில் தான் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்கின்றன. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டு வருகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய புள்ளிவிவரத்தின் படி, 2015-16-ம் ஆண்டில் மிகக் குறைந்த குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் ஜம்மு-காஷ்மீரும் இடம்பெற்றுள்ளது.

தேசிய ஊடகங்கள் தான் ‘டிஆர்பி’க்காகவும் பரபரப்பு செய்திக்காகவும் காஷ்மீர் குறித்து எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதை பார்க்கும் மக்கள் ஜம்மு- காஷ்மீர் சுற்றுலாவுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் என முடிவு செய்துவிடுகின்றனர். ஊடகங்கள் மற்றும் மக்களின் இந்த பார்வை முற்றிலும் தவறானது.

அந்த பார்வையை மாற்ற நீங்கள் என்ன முயற்சி எடுத்து வருகிறீர்கள்?

கேரளாவை போலவே எங்களது மாநிலத்தின் பொருளாதாரமும் சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்துள்ளது. அதனால், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக முதல்வர் மெகபூபா அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இதன்காரணமாக, சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக மாநில அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு செல்ல ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் யூடியூப்பில் வெளியிட்ட ‘தி வார்மஸ்ட் பிளேஸ் ஆன் எர்த்’ வீடியோவை இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

தற்போது, முதல்கட்டமாக சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு சென்று அந்த மாநிலத்தின் முக்கிய சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று சினிமா துறையினருடன் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துவருகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in