Published : 10 Oct 2023 06:00 AM
Last Updated : 10 Oct 2023 06:00 AM
சென்னை: அரசின் வருவாய் அதிகரித்தும்போக்குவரத்து தொழிலாளர்களுக்காக செலவிட அரசுக்கு மனமில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். போக்குவரத்துத் துறையைதனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் சென்னை, பல்லவன் இல்லம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்குஎதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 29 மாத கால ஆட்சியில் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறிவிட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவருமே இன்று போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு தவறான தகவலை கூறி வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பண பலன்களுடன் வீட்டுக்கு சென்றனர். இன்று வெறும் கையுடன் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்கள்ஆட்சியில் 6 ஆயிரம் பேருந்துகளை கொள்முதல் செய்தோம்.
பராமரிப்பு சிறப்பாக இருந்தது. உதிரி பாகங்களும் போதுமான அளவு இருந்தது. ஆனால் இப்போது பராமரிப்பும் இல்லை, உதிரி பாகங்களும் கையிருப்பில் இல்லை. எங்கள் ஆட்சியில் 14 ஆயிரம் பேரை பணியமர்த்தி இருக்கிறோம். ஆனால் திமுக ஆட்சியில் ஒருவரைகூட நியமிக்கவில்லை. பழனிசாமி ஆட்சி காலத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்குபணப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று கையில் தட்டு ஏந்தி போராடும் அளவுக்கு போக்குவரத்து தொழிலாளர்களின் நிலை இருந்து வருகிறது.
கடந்த ஆண்டைவிட இந்தஆண்டு வருவாயை அதிகப்படுத்தி இருப்பதாக நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த வருவாயை தொழிலாளர்களுக்கு செலவிட அரசுக்குமனம் வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஸ்டாலினை சந்தித்து கூடுதல் தொகுதிகளை கேட்டாரே தவிர, தொழிலாளர்களுக்காக எதையும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT