

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பிஏபி வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்குள் இருந்த கிணற்றின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து மின் கம்பத்தில் ஏறி விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.
பொள்ளாச்சியை அடுத்த எஸ்.மலையாண்டி பட்டணத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (58) விவசாயி. இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், பிஏபி வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்குள் இருக்கும் கிணறுகளின் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை வருவாய்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துசாமியின் கிணறு வாய்க்காலில் இருந்து 41 மீட்டர் தொலைவுக்குள் வருவதாக கூறப்படுகிறது. முத்துசாமி நேற்று வெளியூர் சென்றிருந்த நிலையில், வருவாய் துறையினர் முத்துசாமியின் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு வரும் மின் இணைப்பை மின்வாரிய பணியாளர்கள் உதவியுடன் துண்டித்துள்ளனர்.
இதனை அறிந்த முத்துசாமியின் மகன் மனோஜ் குமார் (23) தென்னந்தோப்பில் உள்ள மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இது குறித்து கோமங்கலம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் ராஜதுரை மற்றும் வருவாய் துறையினர் மனோஜ் குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
“மின் இணைப்பைத் துண்டித்தால் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பலமுறை கூறியும் அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து விட்டனர். மீண்டும் மின் இணைப்பு கொடுத்தால் மட்டுமே இறங்கிவருவேன்” என மனோஜ்குமார் கூறி, மின் கம்பத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதும் மனோஜ் குமார் கீழே இறங்கி வந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.