

சென்னை: கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கியதால் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் நேரடி மேற்பார்வையில் தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்திருந்தார்.
மொத்தம் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுபோக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து காவல்கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர்தலைமையிலான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். மேலும், பாதுகாப்பு கருதி கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கூடுதலாக மின் விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. அது மட்டும் அல்லாமல் ட்ரோன் மூலமும் ரோந்து பணி நடைபெற்றது. போக்குவரத்து போலீஸார் கையடக்க நவீன கேமராக்கள் மூலம் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்கள், அவர்களின் நடமாட்டம், அவர்கள் பயணித்த வாகனங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்தனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
போலீஸாரின் இதுபோன்ற நடவடிக்கைகளால் கிரிக்கெட் போட்டியின் போது சிறு அசம்பாவித சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் என எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து சிறப்பான பாதுகாப்பு வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து போலீஸாருக்கும் சென்னை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார்.