

சென்னை: வாகன நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாசாலை - நந்தனம் சாலை சந்திப்பில் புதிய `யூ' வளைவுஅமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையிலும் பல போக்குவரத்து மாற்றங்களை செய்து வருகின்றனர். வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை போக்குவரத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிபுணர் குழுக்கள் இணைந்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கூகுள் நிறுவனத்துடன் இணைந்ததோடு மட்டும் அல்லாமல் நவீன கருவி மூலம் வாகனங்களின் எண்ணிக்கை, நெரிசல் அடர்த்தி போன்றவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அண்மையில் அண்ணாசாலை - ஸ்பென்சர் சந்திப்பில் புதிய போக்குவரத்து மாற்றம் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அண்ணாசாலை - நந்தனம் சாலை சந்திப்பில் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே புதிய போக்குவரத்து மாற்றத்தை நடைமுறைப்படுத்த போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து, இச்சாலை சந்திப்பில் ட்ரோன்களை பறக்கவிட்டு அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம், சிக்னல் பகுதியில் தேங்கி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் தற்போது அண்ணாசாலை சந்திப்பு - நந்தனம் சாலை சந்திப்பு அருகே புதிய ‘யூ’ வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மூப்பனார் பாலத்தைகடந்து சேமியர்ஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி அண்ணா சாலை வந்தடைந்து கிண்டி நோக்கி செல்லலாம்.
அவர்கள் அண்ணா மேம்பாலம் வழியாக செல்ல விரும்பினால் அதே வழியாக இடதுபுறம் திரும்பி சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு நேராக சென்று மீண்டும் அண்ணா சாலையில் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியின் முன்பு வலதுபுறம் திரும்ப புதிதாகயூ வளைவு கொடுக்கப்பட்டுள்ளது.
சேமியர்ஸ் சாலைவழியாக தி.நகர் செல்ல விரும்புபவர்களும் இதே யூ வளைவில் வலதுபுறம் திரும்பி, நந்தனம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். இதன் மூலம் வாகனங்கள் தேவையற்ற சிக்னலில் சிக்காமல், நேரமும் மிச்சமாகி சீரான வேகத்தில் செல்ல முடியும்என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் தெரிவித்தார். தற்போது சோதனைஅடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.