Published : 10 Oct 2023 06:20 AM
Last Updated : 10 Oct 2023 06:20 AM
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக, ரூ.2,821 கோடியில் 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 30 புதிய மெட்ரோ ரயில் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது, விமான நிலையம்முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை- சென்னை சென்ட்ரல்வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 2.50 லட்சம் முதல் 2.80 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.
நெரிசல் மிகுந்த நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நெரிசலை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனிடையே, இரு வழித்தடங்களிலும் பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது.
இதுதொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்புதல் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து, மெட்ரோரயில் முதல்கட்டத்தின் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028-ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு, ரூ.2,820.90 கோடிமதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்கட்டமாக, 6 பெட்டிகளை கொண்ட 5 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.2,821 கோடி மதிப்பில் 6 பெட்டிகளைக் கொண்ட 28 மெட்ரோரயில்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 6 பெட்டிகளைக் கொண்ட 5 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.300 கோடி கடன் வாங்கப்பட உள்ளது.
இதற்கான ஆவணப் பணிகள் தொடங்கியுள்ளன. கடன்ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, 30 மெட்ரோ ரயில் பெட்டிகளை வாங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT