தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளைச்சல் அமோகம்

உத்தமபாளையம் புறவழிச் சாலையில் அறுவடைப் பருவத்தை எட்டியுள்ள நெற்கதிர்கள்.
உத்தமபாளையம் புறவழிச் சாலையில் அறுவடைப் பருவத்தை எட்டியுள்ள நெற்கதிர்கள்.
Updated on
1 min read

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் விளைச்சல் அமோகமாக உள்ளதால், அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரமடைந்துள்ளன. விளைச்சல் திருப்திகரமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 14,707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் விவசாயப் பணிக்கு, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தலைமதகு விவசாயப் பகுதியான கூடலூரிலிருந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, வீரபாண்டி என அடுத்தடுத்து விவசாயப் பணிகள் தொடங்கின. தனியே நாற்றுப்பாவி பின்பு வயல்களில் நடவு செய்யப்பட்டன. நடவு செய்யப்பட்ட இந்த நாற்றுகள் தற்போது நெல்மணிகளுடன் திரட்சியாக காட்சியளிக்கின்றன.

வழக்கம் போல் இந்த ஆண்டும் நெல் விளைச்சல் நன்றாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கையன் கோட்டை, க.புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நெற் பயிர்கள் அறுவடைப் பருவத்தை எட்டியுள்ளன. இன்னும் சில வாரங்களில் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரியாறு அணை மூலம் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் விளைச்சல் இந்த ஆண்டும் திருப்திகரமாக உள்ளது. சில இடங்களில் நீர் திறப்புக்கு முன்பாகவே நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னதாகவே அறுவடை தொடங்க வாய்ப்புள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in