Published : 20 Dec 2017 03:21 PM
Last Updated : 20 Dec 2017 03:21 PM

விரைவில் மேலும் பல வீடியோக்கள், புகைப்படங்கள் வெளிவரும்: தங்க தமிழ்ச்செல்வன்

அப்பல்லோ மருத்துவமனைக்கு கடந்த 2016 செப்.22 அன்று ஜெயலலிதா உயிரிழந்த நிலையில்தான் கொண்டு வரப்பட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை பொறுக்கமுடியாமல்தான் வீடியோவை வெளியிட்டோம், இதே போல் இன்னும் பல வீடியோக்கள் புகைப்படங்கள் உள்ளது, விரைவில் வெளிவரும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை பற்றிய பல தகவல்கள் உலாவந்த நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற வீடியோ வெற்றிவேல் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனிடம் இது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா வீடியோ தற்போது வெளியிடப்பட்டதன் காரணம் என்ன?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று ஓபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஓட்டு கேட்கிறார்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று மக்களிடம் பொய் சொல்கிறார்கள், பிட் நோட்டீஸ் போடுகிறார்கள். இதை எல்லாம் பொறுக்க முடியாமல்தான் ஆதங்கத்துடன் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.

எச்.ராஜா வீடியோ நம்பகத்தன்மை பற்றி ஆராய வேண்டும் என்கிறாரே?

முதலில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கு என்று சொன்னார்கள். இப்போது என்ன உண்மைத்தன்மையை ஆராய வேண்டுமாம்? ஜெயலலிதா உயிரோடு இருந்தார் எனபதை நிரூபிக்கும் வீடியோ வெளியிட்டுவிட்டோம். பொய்யா இல்லையா என்று சந்தேகம் எழுப்புகிறவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அன்று உயிரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று சொன்னார்கள். ஓபிஎஸ்,  தமிழிசை சவுந்தரராஜன் உட்பட எல்லோரும் சொன்னார்கள். இன்று அப்பட்டமாக நலமுடன் தான் இருந்தார், உயிரோடுதான் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. இது துரோகிகளுக்கு கிடைத்த அடி.

தினகரனிடம் அனுமதி பெற்றுத்தான் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டாரா?

அது தெரியாது. அனுமதி பெற்றாரா இல்லையா தெரியாது. வீடியோ படம் வந்திருக்கு. அவரு அவர் தலைவியை கொச்சைப்படுத்துவதை சகிக்காமல் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இது தேர்தல் விதிமீறல் இல்லையா? பிட் நோட்டீஸ் போட்டு விநியோகிக்கிறார்கள். அதை பொறுக்க முடியாமல் ஆதங்கத்தில்தான் அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இது தேர்தல் விதிமீறல் என்று ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளாரே?

தேர்தல் விதிமீறல் என்று ஒப்புக்கொள்கிறேன். நாங்கள் நோட்டீஸ் போட்டு வீடியோ வெளியிட்டு, எங்கள் அண்ணன் குக்கர் சின்னத்தில் நிற்கிறார் இத்தனையாவது இடத்தில் சின்னம் இருக்கு அதில் வாக்களியுங்கள் என்றா விளம்பரப்படுத்துகிறோம்.

இந்த வீடியோவால் அதிமுக வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வருகிறது அல்லவா?

வெற்றி வாய்ப்பு எப்படி பாதிக்கும். ஜெயலலிதா உயிரோடு இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறோம், இதில் நாங்க ஓட்டு கேட்கவில்லையே. ஏன் பயப்படுகிறீர்கள். ஜெயலலிதா மர்மமாக இறந்து போனார் என்று சொன்னீர்கள் அல்லவா?, மர்மமாக இறக்கவில்லை, நன்றாகத்தான் இருந்தார் என்று வெளிப்படுத்தியுள்ளோம். இதில் நீங்கள் தெளிவுப்படுத்துங்கள். மாநில அரசு இருக்கு, மத்திய அரசு இருக்கு, தேர்தல் ஆணையம் இருக்கு. இதை தெளிவுப்படுத்துங்கள். மூன்றுபேரும் ஒன்று சேர்ந்து சதிதிட்டம் தீட்டுங்கள் நாங்கள் சந்திக்கிறோம்.

10 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது இதை வெளியிடாமல் இன்று வெளியிடுவது ஏன்?

நேற்று நடந்த பிரச்சாரம் எங்களை கடுமையாக பாதித்துவிட்டது. ஜெயலலிதா சாவில் மர்மம் என்று பிட் நோட்டீஸ் போட்டு அவர் அவரது இறுதி மரியாதை படத்தை போட்டு ஜெயலலிதா மரணத்துக்கு இவர்கள்தான் காரணம் இவர்களை மன்னிக்கக் கூடாது என்று விநியோகிக்கிறார்கள். அச்சகத்தின் பெயரில்லை. எதற்கு நேற்று இந்த பிரசுரத்தை வெளியிட வேண்டும். இது எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. அதை தாங்க முடியாமல்தான் மாவட்டச்செயலாளர் என்ற முறையில் வெற்றிவேல் தனக்கு கிடைத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இது விதிமீறல் ஆகாதா?

இது விதிமீறல் ஆகாது. எது விதிமீறல் இன்றும் வெளி மாவட்டத்துக்காரர்கள் 50 ஆயிரம் பேரை ஓபிஎஸ், இபிஎஸ் இன்றும் ஆர்.கே.நகரில் தங்க வைத்துள்ளனர். இது விதிமீறல் ஆகாதா? இன்றும் அவர்களை வெளியேற்றவில்லையே. ரூ.120 கோடி பணம் பட்டுவாடா நடந்துள்ளது. வாக்குக்கு ரூ.6 ஆயிரம் அடியாட்களை வைத்து விநியோகித்துள்ளனர். அவர்களை ஏன் தடுக்கவில்லை, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வீடியோவை வெளியிட்டீர்களா?

எதுக்கு தேர்தல் ரத்து செய்ய வேண்டும்? என்ன அவசியம் வந்தது? மக்களிடம் உண்மையை சொல்கிறோம். மருத்துவமனைக்கு சுய நினைவுடன் வந்தது உண்மை, நலமடைந்தது உண்மை, சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததும் உண்மை. அதை நிரூபிக்கத்தான் இந்த வீடியோ.

ஓபிஎஸ் பிரிந்தபோது கடுமையான குற்றச்சாட்டு இருந்த காலத்திலேயே வீடியோவை வெளியிடாமல் இப்போது ஏன் வெளியிடுகிறீர்கள்?

நாங்களும் பொறுமையாகத்தான் இருந்தோம், எங்களுக்கு வெளியிடும் எண்ணமே இல்லை. எங்கள் பொறுமையை சோதிக்கும் விதத்தில் பிட் நோட்டீஸ் வந்தது. அதை பொறுத்து கொள்ள முடியாமல்தான் வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோ இதற்கு முன்னர் நீங்கள் பார்த்தீர்களா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் இதற்கு முன்னர் பார்க்கவில்லை, இன்று பார்த்தபோது கண்ணீர் வந்தது. ஜெயலலிதா என்னை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர். ஆண்டிப்பட்டியில் அவர் தொகுதி பொறுப்பாளராக இருந்தவன் நான். அதனால் என்னை தம்பி என்று அழைத்து மரியாதையாக பேசுவார். அப்படி எல்லாம் பார்த்தவன் நான்.

இறந்து போய் சேர்த்தார்கள் என்று கூறியபோது எப்படி துடித்திருப்பேன். ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது ஜெயலலிதா இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற மன நிறைவு இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல மக்களுக்கும் அந்த எண்ணம் இருக்கும். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை, சரியான நேரத்தில் ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார் எனபதை வெளிப்படுத்திய வீடியோ, சதிகாரர்களின் சதியை வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை.

விவேக் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

அதற்கு முன்பே டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டாரே. ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பதாக யாரோ ஒருவர் கூறி வருகிறார், ஜெயலலிதா பற்றி கொச்சைப்படுத்தும் விதமாக அவதூறாக எழுதினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தாரே. அதையேத்தான் விவேக் மீண்டும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

இது போன்ற வேறு வீடியோக்கள் உள்ளனவா?

இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது, இன்னும் பல புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவர வாய்ப்புள்ளது. பதவிக்காக மட்டுமே பொய்யைப் பேசக்கூடிய துரோகிகளை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய வகையில் இன்னும் பல வீடியோக்கள் வெளிவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x