

திருச்சி: திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள படுக்கைகள் நிரம்பியதை அடுத்து புதிதாக வரும் நோயாளிகள் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்யும் மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஒரு சிறுவன், கர்ப்பிணி உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டில் உள்ள 60 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதனால், போதிய படுக்கை வசதியில்லாததால் ஏற்கெனவே சிகிச்சை பெறுபவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி செல்லும் வரை புதிதாக வரும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் வரும் போது, ஏற்கெனவே சிகிச்சை பெற்று வருபவர்களை தரையில் படுக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் தனி வார்டில் படுக்கைகள் நிரம்பி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச் சாட்டியுள்ளனர்.
இது குறித்து நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸ் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் எங்கள் பகுதியில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. எனது மகனுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனைக்கு பிறகு டெங்கு உறுதி செய்யப்பட்டது.
அங்கு சிகிச்சை பெற ரூ.40 ஆயிரம் வரை செலவாகும் என்பதால், அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எனது மகனை அழைத்துச் சென்றேன். ஆனால், அங்கு படுக்கை இல்லாததால், எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். எனவே, அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் நேருவிடம் கேட்டபோது, “திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளில் தலா ஒரு முதுநிலை மருத்துவர், 2 முது நிலை பயிற்சி மருத்துவர்கள், 2 செவிலியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பெரியவர்கள் 28, குழந்தைகள் 14, கர்ப்பிணிகள் 5 என மொத்தம் 47 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை உறுதி செய்யப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் நோயாளிகள் அதிகரிக்கும்பட்சத்தில் தேவைக்கேற்ப படுக்கைகள் அதிகரிக்கப்படும்” என்றார்.