Published : 18 Dec 2017 10:14 AM
Last Updated : 18 Dec 2017 10:14 AM

நெல்லையில் ‘தி இந்து’ பெண் இன்று மகளிர் திருவிழா: சைபர் குற்றத்தை தடுக்க உலகளாவிய சட்டம் தேவை- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியை வலியுறுத்தல்

‘பெண்களை குறிவைத்து நடக்கும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க உலகளாவிய சட்டம் அவசியம் தேவை’ என திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் பியூலா சேகர் வலியுறுத்தினார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில், மகளிர் திருவிழா, மதுரை, தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழா அரங்கம் வாசகிகளால் நிரம்பி வழிந்தது. விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குநர் டி.கெட்ஸி லீமா அமலினி பேசியதாவது:

மங்கையராக பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பது முற்றிலும் சரியானது. பெண்கள், பெண்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.பிரச்சினைகள் வரும்போது பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும். கணவருக்கு பணிவிடை செய்வதில் குறைவு ஏதும் இல்லை, மகிழ்ச்சிதான். கணவருக்கு தேவையானதை சமைத்துக் கொடுக்காமல், பணிவிடை செய்யாமல் அவரை எப்படி கைக்குள் போட முடியும்? வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. அன்புக்கு முன்னால் அனைத்தும் பூஜ்யம்தான் என்றார் அவர்.

‘சைபர் குற்றங்களைத் தடுப்பது எப்படி?’ என்பது குறித்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பியூலா சேகர் பேசியதாவது:

இணையதளத்தை பயன்படுத்துவோரில் மூன்றில் 2 பங்கு பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர். இணையதளத்தை பற்றி தெரிந்துகொள்ளாமல் அதை நாம் பயன்படுத்துவதே இதற்கு காரணம். தொடக்க காலத்தில், பணம் பறிக்கும் நோக்கில் சைபர் குற்றங்கள் நடந்தன. இப்போது அதையும் தாண்டி வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளன.

கணினியை ஹேக் செய்து தகவல்களை திருடுவது, தகவல்களை அழிப்பது ஒரு வகை சைபர் குற்றம். கணினியை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவது மற்றொரு விதம்.

பாலியல் தொல்லை

புகைப்படங்களை மார்பிங் செய்து, அவதூறாக வெளியிடுவது போன்ற குற்றச் செயல்களும் நடக்கின்றன.இணையதள வசதியை வீட்டில் உள்ள பொதுவான அறையில் வைக்க வேண்டும். தனி அறையில் இணையதளத்தை பயன்படுத்தியவர்கள்தான் நீலத்திமிங்கலம் விபரீதத்தில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்டனர்.

பெண்களைக் குறிவைத்து நிறைய சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க ஐடி சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவை உள்ளன. எனினும், உலகளாவியச் சட்டம் அவசியம் என்று பேசினார்.

பேச்சரங்கம்

‘குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் பாகுபாடு காட்டுகிறார்களா, இல்லையா?’ என்ற தலைப்பில் கலகலப்பான பேச்சரங்கம் நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடையநல்லூர் உறுப்புக் கல்லூரி முதல்வர் வேலம்மாள் முத்தையா நடுவராகப் பங்கேற்றார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த் துறை (சுயநிதிப் பிரிவு) தலைவர் இரா.அனுசியா, பாளையங்கோட்டை தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் இந்திரா ஆகியோர் வாதாடினர். “தங்கள் கடைசி காலத்தில் ஆண் பிள்ளைகள்தான் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்பது பெற்றோர்கள் அபிமானம். இதனால், குழந்தைகள் வளர்ப்பில் பாகுபாடு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதேவேளை, பெண் பிள்ளைகள்தான் பெற்றோர்கள் மீது கரிசனத்தோடும், அக்கறையோடும் இருக்கிறார்கள். பாரபட்சம் காட்டும் போக்கு மாற வேண்டும்” என நடுவர் வேலம்மாள் முத்தையா தீர்ப்பு கூறினார். காலை நிகழ்ச்சிகளை பாளையங்கோட்டை சாராள்தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் எஸ்.ஜெயமேரி தொகுத்து வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

திருநெல்வேலி சங்கர்நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூபிளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 130 மாணவ, மாணவியர் பங்கேற்ற சிறப்பு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி கரையிருப்பு பகத்சிங் கலைக்குழுவினரின் தப்பாட்டமும் வரவேற்பைப் பெற்றது.

மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை உடனடி போட்டிகள், திடீர் போட்டிகள், பம்பர் பரிசுக்கான குலுக்கல் ஆகியவை நடத்தப்பட்டு, உடனுக்குடன் பரிசு மழையில் வாசகிகள் நனைந்தனர். பிற்பகல் நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

இணைந்து வழங்கியவர்கள்

நெல்லை மகளிர் திருவிழாவை ‘தி இந்து’வுடன், தைரோ கேர், தி சென்னை சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, ஜெப்ரானிக்ஸ், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சாம்சன் கிச்சன், மயூரி டிவி ஆகியவை இணைந்து வழங்கின. போட்டிகளில் வெற்றிபெற்ற வாசகிகளுக்கு சாஸ்தா கிரைண்டர்ஸ், பிருத்வி, உடுப்பி ருசி, கோகுல் சாண்டல் சோப், பிரீமியம் குவாலிட்டி புட்ஸ், பொன்வண்டு டிடெர்ஜென்ட், ராஜேஷ் எலெக்ட்ரிக்கல்ஸ், ஒன்டர் பீட் பிளாசம் கார்டன் சென்டர், அன்னை டேட்ஸ், சிங்கர் கிரேஸ் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பரிசுகளை வழங்கின. இவ்விழா நிகழ்ச்சி வரும் 25-ம் தேதி நெல்லை மயூரி டிவியில் ஒளிபரப்பாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x