Published : 11 Dec 2017 11:02 AM
Last Updated : 11 Dec 2017 11:02 AM

நீர்வரத்து வெகுவாக குறைந்தது பிரதான 4 ஏரிகளும்பாதியளவுகூட நிரம்பவில்லை: சென்னையில் குடிநீர் விநியோக அளவு குறைக்கப்படலாம் என்று தகவல்

பிரதான நான்கு ஏரிகளும் பாதியளவு கூட நீர் இல்லாததால் சென்னை யில் தற்போதைய குடிநீர் விநியோக அளவைக் குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

நடப்பு ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாட்களில் பலத்த மழை பெய்ததால் வறண்டு கிடந்த சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வந்தது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஏரிகளில் நீர் இருப்பு 5 டிஎம்சி-யை எட்டியது. இந்நிலையில், கடந்த ஒருவார மாக மழைப் பொழிவு இல்லாததால், குறிப்பாக சென்னையில் பெய்த அளவுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மழை பெய்யாததால், ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாகக் குறைந்தது.

பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அறவே இல்லை. புழல் ஏரிக்கு விநாடிக்கு 100 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 48 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நான்கு ஏரிகளிலும் பாதியளவு கூட நீர் நிரம்பவில்லை. நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. தற்போது 5,247 மில்லியன் கனஅடி மட்டுமே நீர்இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதேநாள் நான்கு ஏரிகளிலும் 1,122 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந் தது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, நான்கு ஏரிகளிலும் நீர் இருப்பு தற்போது அதிகமாக உள்ளது. இருந்தாலும், வடகிழக்குப் பருவமழை மேலும் பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் சென்னையில் தற்போது விநியோகிக்கும் குடிநீர் அளவை அப்படியே வழங்க முடியும்.

இனிமேல் மழைப் பொழிவு இல்லாவிட்டால், வரும் கோடை யைக் கருத்தில் கொண்டு தின சரி குடிநீர் விநியோகத்தை சற்று குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால் ஆந்திர மாநிலத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரவில்லை. அடுத்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலம் வரை குடி நீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் ஏரிகளின் நீர்இருப்பைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x