Published : 09 Oct 2023 05:23 AM
Last Updated : 09 Oct 2023 05:23 AM

முக்கிய வழித்தடங்களில் 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே நடவடிக்கை

சென்னை: தெற்கு ரயில்வேயில் 1,394 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மேம்படுத்தி, 110 கி.மீ. வேகம் வரையில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையின் கையேட்டின்படி, ரயில்களில் வேகம் குரூப்-ஏ வழித்தடம், குரூப்-பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கி.மீ. வரையும், குரூப்-பி வழித்தடத்தில் 130 கி.மீ. வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பணிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது, தண்டவாளத்தின் தரத்தை மேம்படுத்துவது, நவீன சிக்னல்கள் அமைப்பது, பாலங்களை வலுப்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே, முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. மொத்தம் 413 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 130 கி.மீ. வரை வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவைதவிர, 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 1,394 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மேம்படுத்தி 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவை தவிர, 2023-24-ம் நிதியாண்டுக்குள் 1,394 கி.மீ. தொலைவுக்கு பாதையை மேம்படுத்தி, ரயில்களை 110 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கொருக்குப்பேட்டை-அத்திப்பட்டு 3-வது, 4-வது பாதை, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மெதுவான பாதை, கரூர்-திண்டுக்கல், போத்தனூர்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு, கன்னியாகுமரி-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-ஆலப்புழா, விழுப்புரம்-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர், திருவாரூர்-காரைக்குடி, நீடாமங்கலம்-மன்னார்குடி, திருச்சி-ராமேசுவரம், மதுரை-மானாமதுரை, விருதுநகர்-தென்காசி, மதுரை-திருமங்கலம், வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் ரயில்பாதைகளை மேம்படுத்தி, ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் பாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x