Published : 20 Jul 2014 10:45 am

Updated : 21 Jul 2014 15:47 pm

 

Published : 20 Jul 2014 10:45 AM
Last Updated : 21 Jul 2014 03:47 PM

சாலை சூரிய மின் உற்பத்தி திட்டம் சாத்தியமா?

இப்போது கட்டிடங்களின் மேற்பரப்பு, திறந்தவெளி பகுதிகளில் மெல்லிய ஃபிலிம் தொழில்நுட்பம் மூலம் பேனல்களில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் புதிய சூரிய மின் உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான், அமெரிக்காவின் இடாஹோ மாநிலம், சேஹில் பகுதியைச் சேர்ந்த ஜூலி, ஸ்காட் ப்ரூஷா தம்பதியர் சாலைகள் மூலம் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தைக் (Solar roadways) கண்டுபிடித்துள்ளனர். சேஹில் நகர சாலைகள், ரயில் நிலையங்கள், பூங்காங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களில் இந்த தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து இவர்கள் கூறும்போது, “நாடு முழுவதும் இருக்கும் சாலைகள் அனைத்திலும் நாங்கள் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரம் தயாரித்தால் நம் தேவையைப்போல மூன்று மடங்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். நாசாவிலும், அமெரிக்க அதிபர் ஒபாமா முன்னிலையிலும் எங்கள் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்த அவர்கள் தங்களது தொழில்நுட்பம் குறித்து கீழ்கண்ட உத்தரவாதங்களை அளித்துள்ளனர்.

மின்சாரம் உற்பத்தியாவது எப்படி?

தார் அல்லது சிமெண்ட் சாலைக்கு பதிலாக செயற்கைக் கற்களை (Slap) பொருத்தி சோலார் சாலைகள் அமைக்கப் படுகின்றன . இந்த செயற்கைக் கற்கள் மூன்று படிமங்களைக் கொண்டது. இதன் மேற்பரப்பு சூரிய ஒளியை உள்வாங்கும். இது 257 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பத்தையும், 113 டன் வரையிலான எடையையும் தாங்கும். நடுப்பகுதியில் மின்னனு செல்கள் பொருத்தப்பட்டு, அவை சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. உற்பத்தியாகும் மின்சாரம் சாலையின் இருபுறமும் மூடப்பட்ட கால்வாய்களில் இருக்கும் கேபிள்கள் வழியாக ‘கிரிட்’டுக்கு அனுப்பப்படுகிறது. இந்த சாலைகளை மின்னல் தாக்கினாலும் சேதமடையாமல் இருக்க மின் தாங்கி சில்லுகள் (Metal - oxide varistors) பொருத்தப்பட்டுள்ளன.

பயன்பாடுகள்

சாலையின் இருபுறமும் அமைக்கப் பட்டுள்ள மூடப்பட்ட கால்வாய்களின் பிரத்யேக கேபிள்களின் மூலம் வாடிக்கை யாளர்கள் தங்களது மின்னனு வாகனங் களுக்கு தேவையான மின்சாரத்தை சார்ஜ் செய்து (Recharge) கொள்ளலாம்.

வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரத்தை இதிலிருந்து பெற முடியும்.

வாகனம் ஓட்டிச் செல்லும்போது, சில கிலோ மீட்டர் தொலைவு முன்னால் சாலை சேதம் அடைந்திருந்தாலோ விபத்து ஏற்பட்டிருந்தாலோ வாகன ஓட்டிகளுக்கு அபாய விளக்கு மூலம் எச்சரிக்கை செய்யும். குறிப்பிட்ட தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தாலும் அதையும் குறிப்பிட்டு மாற்றுப் பாதையையும் தெரிவிக்கும்.

* சாலையின் மேற்பரப்பு குறைந்தது 20 ஆண்டுகளும், சோலார் செல்கள் தானியங்கி முறையில் மின்னேற்றிக் கொண்டு 30 ஆண்டுகளும் தொடர்ந்து உழைக்கும்.

முதல்கட்டமாக சில தேசிய நெடுஞ்சாலைகளில் இதனைச் செயல்படுத்த சோலார் ரோடுவேஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசின் ஃபெடரல் ஹைவே அட்மினிஸ்ட்ரேஷன் (Federal Highway Administration) நிறுவனம் அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கியுள்ளது.

‘வேஸ்ட் லேண்ட்’-ல் சூரிய மின் உற்பத்தி

சுமார் 7,500 மெகா வாட் திறன் உள்ள சூரிய மின் உற்பத்தி திட்டங்களை கார்கில் மற்றும் லடாக் பகுதியில் சமீபத்தில் மத்திய அரசு தொடங்கியது. இதன் ஒருபகுதியாக லடாக்கில் எதற்குமே பயன்படாது என்று கருதப்பட்ட, மனித நடமாட்டம் இல்லாத மற்றும் புல்பூண்டு கூட முளைக்காத ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 30 ஆயிரம் சிறிய வகை சோலார் பேனல்களை இந்திய அரசு அமைத்து வருகிறது.

இதன் மூலம் 2.5 லட்சம் வீடுகளுக்கு மின் விநியோகம் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 320 நாட்கள் சூரிய வெளிச்சம் கிடைப்பதுடன் இங்கு மாசு இல்லாத சுற்றுச்சூழல் நிலவுவது சூரிய மின் உற்பத்திக்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமையும் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி திட்டம் இதுவாகதான் இருக்கும்.

சர்ச்சைகளும் சந்தேகங்களும்

இந்த தொழில்நுட்பம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் சந்தேகங்களும் ஏராளம். பழைய தொழில்நுட்பத்தில் சூரிய மின்சாரத்தை தயாரித்து வருபவர்களும் மின் துறையைச் சேர்ந்த நிபுணர்களும் பலரும் இதுகுறித்து முன்வைத்துள்ள கருத்துக்கள் இவை. மின் உற்பத்தி செலவு மற்றும் அதன் விற்பனை விலையை தெரிவிக்கவில்லை. வெள்ளம் மற்றும் பனிப் பொழிவின் போது அவைகளை கட்டுப்படுத்தி நகரை காப்பதுடன், தொடர்ந்து மின் உற்பத்தியும் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கான தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகளைக் குறிப்பிடவில்லை. நிலநடுக்கம், மண் சரிவு போன்ற சமயங்களில் சாலை மேற்பரப்பில் உள்ள பேனல் கள் சேதம் அடையும் என்று குறிப்பிடுபவர்கள், அதனால் மின் உற்பத்தி பாதிக்காது என்று சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று குறிப்பிடவில்லை. வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது தகுந்த பிடிமானம் கிடைக்காது. தவிர, உராய்வு சத்தமும் அதிகமாக இருக்கும். இதனை இவர்கள் குறிப்பிடவில்லை. மின்சார உற்பத்தி நடந்துவருகிறது; அதனை வாங்க நிறைய வாடிக்கையாளர்கள் எங்களை அணுகியுள்ளனர் என்று மேற்கண்ட நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர் யார் என்பதைக் குறிப்பிடவில்லை.


கட்டிடங்கள்மேற்பரப்புதிறந்தவெளி பகுதிகள்ஃபிலிம் தொழில்நுட்பம்சூரிய சக்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x