Published : 09 Oct 2023 04:00 AM
Last Updated : 09 Oct 2023 04:00 AM
உதகை: உதகை அருகே உள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தக் கூடாது என்று ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
உதகை அடுத்த தும்மனட்டி அருகே குந்தசப்பை கிராமத்தில் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 13 கிராம மக்கள் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தக்கார் நியமனம் செய்யப்பட்டார். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு காரணமாக தக்கார் பதவி ஏற்கவில்லை.
தற்போது கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராம மக்களுக்கு ஆதரவாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் பங்கேற்று பேசும்போது, ‘‘பாரம்பரியமாக படுகர் இன மக்கள் வழிபட்டு வரும் மகாலிங்கேஸ்வரர் கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்த அனுமதிக்கக் கூடாது. இக்கோயிலுக்கு தக்கார் நியமனம் செய்த உதவி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்க உள்ளோம். இதற்கு காரணமான அமைச்சர் மற்றும் உதவி ஆணையாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் (உதகை) ஹேமலதா கூறும்போது, ‘‘இந்த கோயில் ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தக்கார் நியமனம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலரை நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் இக்கோயிலில் அறங்காவலர் நியமனத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறங்காவலராக, அந்த கிராமத்தை சேர்ந்த உள்ளூர் நிர்வாகியே இருக்கலாம். ஒருவேளை இதற்கும் கிராம மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT