Published : 09 Oct 2023 04:02 AM
Last Updated : 09 Oct 2023 04:02 AM
சேலம்: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஒதுக்கித்தர வலியுறுத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஏற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், கட்டமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஒதுக்கி தர வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: கடலூரில் இயங்கி வரும் சிப்காட்டில் 50-க்கும் மேற்பட்ட கெமிக்கல் நிறுவனங்களும், பல சாய தொழில் நிறுவனங்களும் இயங்கி மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன.
மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் கடலூர் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. பசுமைத் தாயகம், பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகளும் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளன. மேலும், கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
அபாயகரமான ஆலைகளை இனங்கண்டு தமிழக அரசும், முதல்வரும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டங்களில் சாயப்பட்டறைகளால் ஆறு பாழாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரி, குளம், குட்டைகளில் நிரப்புவதற்கான திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.
மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசும், தமிழக அரசும் அனுமதி அளிக்கக் கூடாது. இதற்காக மக்கள் இயக்கங்களை நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும். மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கித் தர வேண்டும் என வலியுறுத்துவோம். இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT