Published : 09 Oct 2023 06:20 AM
Last Updated : 09 Oct 2023 06:20 AM
சென்னை: மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பயணியும் பெண் டிக்கெட் பரிசோதகரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவர் மீதும் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவர் நேற்றுமுன்தினம் மதியம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்வதற்காக, மின்சார ரயிலில் ஏறினார். இந்த ரயில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றபோது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் தேன்மொழி ஏறி, ஸ்ரீவித்யாவிடம் பயணச்சீட்டை கேட்டார். அவரிடம் பயணச்சீட்டு இல்லை என கூறப்படுகிறது.
செல்போன் பறிமுதல்: உடனடியாக, ஸ்ரீவித்யாவிடமிருந்த செல்போனை வாங்கிக் கொண்டு அபராதம் கட்டி விட்டு செல்போனை பெற்றுச் செல்ல தேன்மொழி தெரிவித்தாராம். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையில், இந்த ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றபோது, அங்குள்ள டிடிஇ அலுவலகத்துக்கு இருவரும் சென்றனர். அங்கு மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் இருவருக்கும் லேசானகாயம் ஏற்பட்டதாக புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, டிக்கெட் பரிசோதகர் தேன்மொழி, வித்யா இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT