Published : 09 Oct 2023 04:04 AM
Last Updated : 09 Oct 2023 04:04 AM

“காவிரி விவகாரத்தில் பொறுப்பை மறந்து பேசும் பிரதமர் மோடி” - சீமான் குற்றச்சாட்டு

காவிரி நதிநீர் உரிமையை மீட்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடந்தது. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும் கர்நாடக மாநில அரசு, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்சினையில் நீதிமன்றம் சென்று தான் உரிமையை நிலை நாட்ட முடியும் என்றால், நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்தியப் பிரதமர், காவிரி நீர் பிரச்சினைக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல “இண்டியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் காவிரி நீருக்காக மோதிக் கொள்கின்றன” என்று பேசுகிறார்.

காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை அவர் மறந்து பேசுகிறார். இந்திய இறையாண்மை, தேசிய ஒற்றுமை பேசும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள், கர்நாடகா என்று வரும்போது மாநிலக் கட்சியாக மாறிவிடும். தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தொகுதியை கேட்டுப் பெறும் நிலையிலும், அங்கு ஆளும் நிலையிலும் உள்ளன. எனவே, ஆட்சியை இழக்க அவர்கள் தயாராக இல்லை.

கர்நாடக மாநில முதல்வர், அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என கருதுகிறார். அதேபோல, தமிழக மக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திமுக அறிவிக்க வேண்டும். உரிய தலைவன் இல்லாததால் சிக்கலை எதிர்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், நமது மண்ணின் வளத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம். புதிய நீர்த்தேக்கங்களை அமைக்காமல், ஏற்கெனவே இருந்த நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து, இங்குள்ள கட்சிகள் விற்பனை செயதுவிட்டன. தமிழக நடிகர்கள் போராடினால், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகப் போராடுவது போலாகிவிடும்.

பெரும்பாலான திரையரங்கங்கள் திமுக கட்டுப்பாட்டில் இருப்பதால், போராடுவோரின் படத்தை வெளியிட திரையரங்கு கிடைக்காது. இவ்வாறு சீமான் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில், மண்டல செயலாளர்கள் ஸ்ரீதர், தியாகராஜன், கோகுல், சால்டின், ஏழுமலை, மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x