Published : 06 Dec 2017 08:43 AM
Last Updated : 06 Dec 2017 08:43 AM

புயல் போன்ற பேரிடர் காலத்தின்போது ஆழ்கடலில் மீனவர்களைக் காப்பாற்ற பேரிடர் மேலாண்மை அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தென்னிந்திய மீனவர் நலச் சங்கம்

இயற்கை பேரிடர் ஏற்படும்போது மீனவர்களை காப்பாற்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும் என மீனவர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளதாவது:

புயல், மழை, குறித்த வானிலை அறிக்கைகள் வானொலி, தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சமூக வலைதலங்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் நிலம் சார்ந்த மக்களுக்கு மட்டுமே சென்றால் போதும் என்ற வகையிலான தகவல் தொழில்நுட்பமே இன்று வரை உள்ளது. ஆழ்கடலில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்களுக்கும் இத்தகவல் தொழில்நுட்பம் சென்றடையும் வகையில் இல்லாதது ஏன்?

சென்னை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 7 முதல் 15 நாட்கள் கடலில் தங்கி தொழில் செய்பவர்கள். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 7 முதல் 45 நாட்கள் ஆழ்கடலில் தங்கி தொழில் செய்பவர்கள். வயர்லெஸ் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் தகவல் பரிமாற்ற தொலைவை கூடுதலாக ஆழ்கடலிலும் தகவல் கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட கடலோர மாவட்டங்களில் தகவல் தொடர்பு கோபுரங்களை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கடலோர காவல்படை, கடற்படை கப்பல்களை ஆழ்கடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் கொடுத்து கரை திரும்ப செய்திருக்க அல்லது மீட்டு வந்திருக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது என அறிவிப்பது புயல் ஓய்ந்த பின்பு இறந்த மீனவ உடல்களை தேடிக் கண்டுப்பிடித்து தர மட்டுமா. எனவே இனியும் காலதாமதிக்காமல் மீனவர்களுக்கு பயன்படும் வகையில் நவீன தகவல் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தி இயற்கைப் பேரிடர்களின்போது அவர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாரதி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x