Published : 08 Dec 2017 09:50 PM
Last Updated : 08 Dec 2017 09:50 PM

கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அச்சகத்தை மூடக்கூடாது: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அச்சகத்தை மூடக்கூடாது. அதற்குப் பதிலாக, கேரளா, கர்நாடகாவில் உள்ள அச்சகங்களை அதனுடன் இணைக்கலாம் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில், ''மத்திய அரசின் அச்சகங்களைப் பிரித்தல், இணைத்தல், சில அச்சங்கங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பாக, தங்களுக்கும், வீட்டுவசதித் துறை அமைச்சர், இணையமைச்சர் ஆகியோருக்கும் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.

தற்போது, மத்திய அரசு அச்சகங்களை இணைத்து அவற்றை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகம் மூடப்படுவதாக தெரிகிறது.

கோவை மத்திய அச்சகம் அடுத்த 4 ஆண்டுகளுக்கான பணி ஆணைகளைப் பெற்றுள்ளது. இங்கு திறன்வாய்ந்த பல பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த அச்சகம் 132.7 ஏக்கர் பரப்பில் செயல்படுகிறது. கர்நாடகா, கேரளாவில் இயங்கும் மத்திய அரசு அச்சகங்களை இணைக்க கோவை அச்சகம் சரியான இடமாகும். இதன்மூலம், தென்னிந்தியாவில் ஒரு மத்திய அச்சகம் தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்படும்.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, கோவை மத்திய அச்சகத்தை செயல்பட அனுமதிக்கும் வகையில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x