Published : 08 Oct 2023 07:10 AM
Last Updated : 08 Oct 2023 07:10 AM

குலசேகரத்தில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு: 3 பேராசிரியர்கள் மீதான புகார் கடிதம் சிக்கியது

சுஜிர்தா

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி, விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் எழுதிய கடிதத்தில் பேராசிரியர்கள் மீது குற்றம் சுமத்தி இருந்தது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்பு (எம்.டி.) படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த சுஜிர்தா, நேற்று முன்தினம் கல்லூரிக்கு வரவில்லை. சக மாணவிகள் விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, சுஜிர்தா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். கல்லூரி தரப்பு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த குலசேகரம் போலீஸார் சுஜிர்தாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதற்கிடையில், மாணவியின் தந்தை சிவக்குமார், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், "எனது மூத்த மகள் சுஜிர்தா, சென்னையில் தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த பின்னர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்ஆண்டு முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். கடந்த 6-ம் தேதி மாலை கல்லூரி நிர்வாகம் சார்பில் என்னிடம் செல்போனில் பேசியவர், சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக த் தெரிவித்தார்.

இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரனை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து, தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் மற்றும் போலீஸார் கல்லூரி விடுதியில் நடத்திய சோதனையில், சுஜிர்தா ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், ஒரு பெண் பேராசிரியை உட்பட 3 பேராசிரியர்கள் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு பேராசிரியர் மனதளவிலும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மனஉைளச்சல் காரணமா?: சுஜிர்தா பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டாரா என்று போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 3 பேராசிரியர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாரபட்சமின்றி நடவடிக்கை: இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறும்போது, ‘‘மாணவியின் தற்கொலை குறித்து 3 கோணங்களில் விசாரணை நடக்கிறது. அவருக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்பதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்.எனினும், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பேராசிரியர், மாணவி சுஜிர்தாவிடம் செல்போனில் பேசியதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

அதேநேரம், சென்னையில் உள்ள ஒருவரிடம், மாணவி அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். மாணவி தற்கொலை சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x