Published : 08 Oct 2023 07:17 AM
Last Updated : 08 Oct 2023 07:17 AM

டெல்டாவில் அக்.11-ல் முழு அடைப்பு: திமுக விவசாய அணி, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஏகேஎஸ்.விஜயன். உடன், விவசாய சங்கப் பிரதிநிதிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்/சென்னை: காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி வரும் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக, திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏகேஎஸ்.விஜயன் தலைமை வகித்தார். திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் தெய்வசிகாமணி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஏகேஎஸ்.விஜயன் கூறியதாவது: நடப்பாண்டு தமிழக அரசு சார்பில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், வழக்கத்தைவிட கூடுதல் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றது.

ஆனால், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியதண்ணீரை கர்நாடக அரசு கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன.

கர்நாடகா அணைகளில் தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமாகதண்ணீர் இருந்தாலும், தமிழகத்துக்கு நீரைத் திறக்க கர்நாடக அரசுமறுக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக, கன்னட அமைப்புகள் இரு முறை முழு அடைப்பு போராட்டம் நடத்தின.

எனவே, டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரைப் பாதுகாக்க, சம்பா சாகுபடியைத் தொடங்க, காவிரியில் மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகள், இந்தப் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட், மதிமுக ஆதரவு: டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுககட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் தமிழகத்துக்கு போதிய தண்ணீர் திறந்து விடாததால் கடைமடைப் பகுதி குறுவை பயிர்கள்கருகி, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். முழு அடைப்புப் போராட்டத்துக்கு முழு ஆதரவளிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க நிர்வாகிகள், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவை சந்தித்தனர். தமிழக விவசாயிகளுக்காக நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x