Published : 08 Oct 2023 11:31 AM
Last Updated : 08 Oct 2023 11:31 AM

திருப்பூர் ஆட்சியருக்கு வந்த புகார் - தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டு ராயபுரம் பிரதான சாலை, சூசையாபுரம் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் அருந்ததியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

அங்கிருந்து மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கக்கூடிய பகுதிக்கு செல்ல இயலாதவாறு, சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தடுப்புச் சுவர் (தீண்டாமை சுவர்) அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் சூசையாபுரம் பகுதியில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள், ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக புகார் எழுந்தது.

எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சிலர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, தொடர்புடைய பகுதியில் மாநகராட்சி உதவி ஆணையர் வினோத், வடக்கு வட்டாட்சியர் மகேஸ்வரன் மற்றும் வருவாய் துறையினர் ஆவணங்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதனடிப்படையில், சுவர் எழுப்பப்பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சுவர் இடித்து அகற்றப்பட்டது. இந்த சுவரை எழுப்பியது கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி என்பதால், அவரது ஆதரவாளர்கள் சுவரை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் சுவர் அகற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x