Published : 08 Oct 2023 04:00 AM
Last Updated : 08 Oct 2023 04:00 AM
சென்னை: கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு என்கிற சிவபாலசுப்பிரமணி (60) நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்வரலாற்று ஆய்வாளரான ஒரிசாபாலு மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்தேன். தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளைக் கடல் வழியே தேடி வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றியவர். தன்னலம் கருதாத தமிழ் நலம் காக்கும் அவரது உழைப்பும் ஆர்வமும் என்றும் மதிக்கப்படும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ் மொழியின் மீதும் இனத்தின் மீதும் பற்றுகொண்ட கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலுவின் மறைவு செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது தேடல்களை எழுத்து வடிவில் கொண்டு வர தமிழக அரசு முன்வர வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழர் வரலாற்றின் மரபு சார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தவர் ஒரிசா பாலு. குமரிக் கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. ஒரிசா பாலுவின் இழப்பு பேரிழப்பாகும்.
திக தலைவர் கி.வீரமணி: தமிழர்வரலாறு தொடர்பாகவும், கடல்கோளால் அழிந்துபோன தமிழரின் பண்டைய நிலம் குறித்தும் தொடர்ச்சியான ஆய்வுகளைச் செய்து தொண்டாற்றியவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: ஒரிசா பாலுவின் மறைவு அதிர்ச்சிஅளிக்கிறது. தமிழினத் தொன்மை குறித்து ஆய்வுதளத்தில் அவர்ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: தனது ஆய்வுகளின் மூலம் பண்டைத் தமிழர்களின் கடல்சார் தொன்மையை உலகுக்கு பறைசாற்றியவர் ஆய்வாளர் ஒரிசா பாலு. தமிழ் மீதும், தமிழ்ப் பண்பாட்டின்மீதும் தீராத பற்று கொண்டிருந்த மாமனிதரை இழந்துவிட்டோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பண்டையகால தமிழர்களின் கடல் அறிவை உலகுக்கு வெளிப்படுத்திய கடல்வழி ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு உயிரிழந்த செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழர்கள் பழம்பெருமை பேசுவதன் மூலமே, இழந்த தம் ஈடு இணையற்ற பெருமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். அவரது புகழ் வரலாற்றில் என்றும் நிலைத் திருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கு.செல்வப் பெருந்தகை, சமக தலைவர் ரா.சரத் குமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் அஞ்சலி: கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலுவின் உடல் காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மாலை அணிவித்து ஏராளமான தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஒரிசா பாலுவின் உடலுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செய்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ஒரிசா பாலு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT