Published : 08 Oct 2023 04:02 AM
Last Updated : 08 Oct 2023 04:02 AM
சென்னை: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்துவதற்காக கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி யிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2014-ம் ஆண்டு முதல் சென்னை தீவுத் திடலில் பட்டாசு மொத்த விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் விற்கப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு விற்பனைக்காக கோரப்பட்ட இரு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாக கடந்த செப். 29ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம், உத்தரவாத தொகை ரூ.2 லட்சம் மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தோம்.
இந்நிலையில், எந்த தகுதியும் இல்லாத சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம் என்ற புதிய சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்தனர். போலி ஆவணங்களை சமர்ப்பித்த அந்த சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்தது ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்ட விதிகளுக்கு முரணானது.
எங்கள் நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க விடாமல் தடுத்ததுடன், புதிய சங்கத்துக்கு டெண்டரை இறுதி செய்ய அரசு அவசரம் காட்டி வருவதால் இந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தின் டெண்டரை ஏற்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அக். 20-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT