Published : 08 Oct 2023 04:08 AM
Last Updated : 08 Oct 2023 04:08 AM
கடலூர்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். இது கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் காவலனாக இருந்து வருகிறது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறு கின்றன.
சென்னை குடிநீருக்காக தொடர்ந்து ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீரே வீராணம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம். மேட்டூர் அணை நீர், கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மழைக் காலங்களில் ஏரியின் நீர் பிடிப்புக் பகுதிக்கான அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்து சேரும்.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், கடந்த மாதம் கீழணையில் இருந்து 8 அடி மேட்டூர் தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 46 அடி வரை உயர்ந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும், தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்ததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.
வீராணம் ஏரியின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 41.85 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து விநாடிக்கு 54 கன அடி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக விநாடிக்கு 200 கன அடியும், விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக விவசாய பணிகளுக்கு 30 கன அடியும் மொத்தமாக விநாடிக்கு 284 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் ஒருவாரம் வரை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT