

திருச்சி: திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், இணைச் செயலாளர்கள் மகளிரணி குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணி தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பேசியது: திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழு, திருமண உதவி திட்டம், கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகைஎன பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
ஆனால், மத்திய பாஜக அரசு, மகளிர் இடஒதுக்கீட்டுக்காக கண்துடைப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. மணிப்பூரில் அரசியல் லாபத்துக்காக சாதி, மத ரீதியாக பிரித்து, தொடர்ந்து மக்களிடையே காழ்ப்புணர்ச்சியை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். வெறுப்பு அரசியலை உருவாக்குவதால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
எந்த இடத்தில் வன்முறை, அதிகாரம், அரசியல் ஆணவம் தலை தூக்குகிறதோ, அது பெண்ணுக்கு எதிரான ஒன்றாக மாறும். எனவே, பாஜகவை அச்சுறுத்தக்கூடிய இண்டியா கூட்டணிக்கு பெண்கள் வலு சேர்க்க வேண்டும் என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை பாஜகவினர் கொச்சைப்படுத்துவது, இழிவுப்படுத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது. எதிர்க்கட்சியினர் மீது என்ன அச்சுறுத்தல்களை உருவாக்கி காட்ட முடியுமோ அதையெல்லாம் அவர்கள் செய்கின்றனர்.
மகளிருக்கு இன்னும் அதிகமாக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதோ அவர்களுக்கே கட்சிதலைமை போட்டியிட வாய்ப்பு வழங்கும். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர். மகளிர் அணி துணைச் செயலாளர் பவானி ராஜேந்திரன் வரவேற்றார். மகளிர் அணி பிரச்சாரக் குழு உறுப்பினர் அமலு எம்எல்ஏ நன்றி கூறினார்.