Published : 23 Dec 2017 03:36 PM
Last Updated : 23 Dec 2017 03:36 PM

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தடையின்றி நடைபெற வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.24) நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையமான ராணி மேரி கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை நடக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் பகுதி முழுவதும், வாக்கு எண்ணும் டேபிள்கள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.

நாளை காலை தொடங்கும் வாக்கு எண்ணிக்கை தடையின்றி நடைபெற வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் 200 பேர் கலந்துக்கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், கூடுதல் தேர்தல் அதிகாரிகள் லலிதா, திவ்யதர்ஷினி, சுபத் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.

மத்திய அரசுத்துறையை சேர்ந்த 18 அலுவலர்கள் நுண்கண்காணிப்பு அலுவலர்களாகவும், தமிழ்நாடு வருவாய் துறையை சேர்ந்த 18 அலுவலர்கள் வாக்கு எண்ணும் அலுவலர்களாகவும் இவர்களுக்கு உதவியாக 18 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் உட்பட 200 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை 14 இருக்கைகள் அமைத்து 18 முழுச்சுற்று மற்றும் ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுகள் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது பணியாற்றும் விதம் குறித்தும், கட்டுப்பாட்டு கருவிகளை கையாளும் விதம் குறித்தும், வாக்கு எண்ணிக்கையினை கணக்கீடு செய்வது, எண்ணிக்கையினை பதிவு செய்வது, கட்டுப்பாட்டு கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும் விதம், வேட்பாளர்களின் முகவர்களுக்கு வாக்குப்பதிவு விவரங்களை தெரியப்படுத்தும் விதம், இதனை முழுமையாக வீடியோ ஒளிப்பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி வகுப்பை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது:

''அனைத்து டேபிள் மற்றும் கண்காணிப்பாளர் டேபிள் அனைத்தும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. டெல்லி மற்றும் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டறை மூலம் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முழுக்க பேசுவது, கணக்கெடுப்பது, சம்பாஷணைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும்.

ஆர்.கே.நகரில் மொத்தம் 258 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு ரவுண்டுக்கு 14 வாக்குச்சாவடிகள் எண்ணப்படும். இதன் மூலம் மொத்தம் 18 முழுச்சுற்றுகளும், கடைசி சுற்றில் 6 வாக்குச்சாவடிகளும் எண்ணப்படும். இதன் மூலம் 19 சுற்றுகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.''

இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x