Published : 17 Dec 2017 10:48 AM
Last Updated : 17 Dec 2017 10:48 AM

மாநிலத்தின் எந்தப் பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு: செயலர் ராஜகோபால் விளக்கம்

அரசியல் அமைப்பு சட்டப்படி, மாநிலத்தின் எந்தப் பகுதிக்கு செல்லவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு என்று ஆளுநரின் செயலர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பபு:

அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழக ஆளுநர், மாநிலத்தின் முதன்மையான நபர் ஆவார். மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் எந்தக் கட்டுப்பாடுமின்றி சென்று நிர்வாகம் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அவருக்கு முழுமையான அதிகாரம் உண்டு. இந்நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து சில தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்த ஆளுநர் அந்த மாவட்டங்களைப் பற்றியும், அங்குள்ள வசதிகள் பற்றியும், பிரச்சினைகள் குறித் தும் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இனி வரும் மாதங்களில் மேலும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள மாவட்ட அதிகாரிகள், பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

ஆளுநரின் உத்தரவின்படியே மாநிலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. மாநிலத்தில் உள்ள நிர்வாக அதிகாரிகள் அனைவரும், ஆளுநரின் கீழ் செயல்படுகின்றனர். அமைச்சரவையை நியமிப்பதும் அவர்தான். பெரும்பாலான நேரங்களில் அமைச்சரவையின் முடிவுகளை ஆளுநர் ஏற்றுக் கொள்கிறார். குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு தன்னிச்சையாகவும் செயல்படலாம்.

ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது என்பது மத்திய அரசின் பின்புலத்தால்தான் என புகார் கூறப்படுகிறது. இது தவறான தகவல் ஆகும். ஆளுநர் மாவட்டங்களில் செயல்படுத்தக் கூடும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வது அப்பகுதிகளில் உண்மையாகவே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான். மேலும், ஆளுநர் முழுமையாகவே பொதுமக்களின் விருப்பத்தின் படியும், அவர்களின் நலனுக்காகவுமே இதுபோன்ற கூட்டங்களை நடத்துகிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x