ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
Updated on
1 min read

சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர்.

திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் வரும் வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம், அடையாறில் உள்ள அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி, காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தினர்.

அதிகாலையில் தொடங்கிய இந்தசோதனை, பல இடங்களில் நள்ளிரவையும் தாண்டி, விடிய விடிய நீடித்தது. அந்த வகையில், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களில் முக்கிய ஆவணங்கள் இருக்கிறதா எனஅதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். ரகசிய அறை உள்ளதா என சுவரைதட்டிப்பார்த்து சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கல்வி நிறுவனநிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனைநடத்தி, அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரம் தேவரியம்பாக்கம், இளையனூர்வேலூரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலைகளுக்கு பணியாளர்களை அனுப்பி வைக்கும் குப்பன் என்பவரது வீடு, வாலாஜாபாத்தில் உள்ளது. அங்கும் நேற்று 2-வது நாளாக சோதனை நடந்தது.

அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு பணம் எண்ணும் இயந்திரத்தை அதிகாரிகள் நேற்று கொண்டு சென்றதால், பல கோடி பணம் சிக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in