Published : 06 Dec 2017 11:10 AM
Last Updated : 06 Dec 2017 11:10 AM

வேட்புமனு நிரகாரிப்பு; அடுத்தது என்ன?- விஷால் விளக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக  நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 11.15 மணியளவில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து நடிகர் விஷால் 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தேர்தல் ஆணையம் நடந்துகொண்ட விதம் குறித்தும் தேர்தல் ஆணையத்தில் வேட்புமனு பரிசீலனையின்போது நடந்த விஷயங்கள் குறித்தும் முதலில் முழுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

குடியரசுத் தலைவர், பிரதமர், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைவருக்கும் இதுகுறித்து தெரிவிக்கவிருக்கிறேன். அனைவருக்கும் கடிதம் மூலம் எனக்கு நேர்ந்ததைப் பதிவு செய்யவுள்ளேன்.

ஒரு மாநிலத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் இதுமாதிரியான நிகழ்வுகள் நடந்தால் நாளை இதுபோல் வேறெங்காவது தேர்தல் நடக்கும்போது இத்தகைய செயல்கள் நடந்தால் என்ன செய்வது? விஷாலை விட்டுத்தள்ளுங்கள் சாதாரண நபரை நினைத்துப்பாருங்கள்.

அதிகாரிகளை நம்பித்தானே நாம் எல்லோரும் வாழ்கிறோம். அதிகாரிகளே இப்படி நடந்து கொண்டால், தப்பு செய்தால் என்ன செய்வது. இப்படி இருந்தால் நாம் யாரை நம்புவது.

எனது வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி என்னிடம் கைகுலுக்கிச் சொல்கிறார். பின்னர், நான் அங்கிருந்து கிளம்பிய வேளையில் வேட்புமனுவை நிராகரித்துள்ளனர். வேட்புமனுவை நிராகரித்தால் அதை வேட்பாளரிடம் தானே சொல்ல வேண்டும். அதுதானே முறை.

ஆனால், நானோ வேட்புமனு நிராகரிப்பை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். எனவே, நடந்தது அனைத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x