Published : 07 Oct 2023 06:16 AM
Last Updated : 07 Oct 2023 06:16 AM
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களைப் போல மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மேலும் 17 ரயில் நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தும் பணியை நிசான் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் செயல்படுத்த உள்ளது
மாற்றுத் திறனாளிகள் பிறர் உதவியின்றி செயல்படும் வகையில் ரயில்நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை தெற்கு ரயில்வே, நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ளதுபோலவே பார்வைத் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லிவழிகாட்டி வரைபடங்கள், இதர வகைமாற்றுத் திறனாளிகள் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் வசதி, மாற்றுத் திறனாளி பயணிகள் எளிதில் ஏறி இறங்குவதற்கு சாய்வுதள அமைப்பு உள்ளிட்டவசதிகள் சென்னை கடற்கரை, காஞ்சி,அம்பத்தூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட 17 ரயில்நிலையங்களில் ஏற்படுத்தும் பணிகளை நிசான் நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் மேற்கொள்ள உள்ளது.
இது தொடர்பான நிகழ்ச்சி, சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறியதாவது: நிசான் நிறுவனம், ரயில்வேயுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்கெனவே இரு கட்டங்களாகச் செயல்படுத்தி உள்ளது. இந்நிலையில், சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 17 ரயில் நிலையங்களில் 3-வது கட்டமாக வசதிகள்மேம்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம்,அனைவரையும் உள்ளடக்கிய ரயில் நிலையங்களை உருவாக்க முடியும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் இனி வரும் காலங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. ரயிலில் மாற்றுத் திறனாளிகள் பெட்டிகளில் உள்ள இருக்கைகளை சாதாரண பயணிகள் ஆக்கிரமிப்பதாகப் புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில், இன்றுமுதல் (நேற்று) ஒருவார காலத்துக்கு மாற்றுத் திறனாளி பெட்டி மற்றும் இருக்கைகளை சாதாரண பயணிகள் ஆக்கிரமிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வில் சாதாரண பயணிகள் பயன்படுத்துவது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி முழு வேகத்துடன் நடைபெற்று வருகிறது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் நான்காவது வழித்தட பணிகள் நிறைவடையும். இவ்வாறு விஸ்வநாத் ஈர்யா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT