

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், அம்பத்தூர் மண்டலம், கொரட்டூரில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் பொதுமக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சாலை வசதி,பள்ளிக் கூடத்தில் கட்டிட வசதி, சமுதாயக்கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி,குடியிருப்பு வசதி, பிறப்பு இறப்புசான்றிதழ் உள்ளிட்ட 474 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அந்த கோரிக்கை மனுக்கள் மீது தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும்,டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியும் நடத்தப்பட்டது. 25 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்களையும், அம்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட 12 பயனாளிகளுக்கு வீட்டுமனைக்கான பட்டாக்களையும் மேயர் பிரியா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஜோசப்சாமுவேல், கா.கணபதி, துணை மேயர்மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மண்டலக் குழுத் தலைவர்கள் பி.கே.மூர்த்தி, கூ.பி.ஜெயின், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மண்டல அலுவலர் டி.விஜூலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.