

செங்கல்பட்டு: தாம்பரத்தை அடுத்த மாம்பாக்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கருவுற்றிருப்பது அறிந்தவுடன் பெண்கள் அருகில் உள்ள சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்கு வழங்கப்படும், இணை உணவு ஊட்டச்சத்து உணவை பெற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு வழங்கப்படும் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 1,266 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 7,746 கர்ப்பிணிப் பெண்கள், 6,390 பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரை 76,406 குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 1 வயது முதல் 5 வயது வரை உள்ள 24,186 குழந்தைகளுக்கு மதிய உணவு, 3 நாட்களுக்கு முட்டையும் வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய 2,100 குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தி சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கும் மகப்பேறு உதவி தொகை திட்டத்தின் கீழ் 7,592 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி, துணைத் தலைவர் காயத்ரி, திருப்போரூர் ஒன்றிய குழுதலைவர் இதயவர்மன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, அரசு அலுவலர்கள், கர்ப்பிணிகள்,பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.