Published : 17 Dec 2017 10:32 AM
Last Updated : 17 Dec 2017 10:32 AM

91-வது ஆண்டாக நடக்கும் மியூசிக் அகாடமி இசை நிகழ்ச்சிகளை இளையராஜா தொடங்கிவைத்தார்

சென்னை மியூசிக் அகாடமியின் 91-வது ஆண்டு இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசை மாநாட்டை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கிவைத்தார். ‘தி இந்து’ வின் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை’ பிரபல சித்ரவீணை கலைஞர் ரவிகிரணுக்கு வழங்கினார்.

சென்னை மியூசிக் அகாடமியின் 91-வது ஆண்டு இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசை மாநாடு (சதஸ்) தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. அவற்றை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:

ஓடிக்கொண்டே இருக்கும் நதியைப் போன்றது இசை. ஒவ்வொரு முறை அள்ளும்போதும் வெவ்வேறு தண்ணீரைத்தான் கையில் எடுக்க முடியும். இசையும் அதுபோன்றதே. மூளையில் தோன்றும் இசை வேறு. அதை வாசிக்கும் போது வேறாகிவிடுகிறது. தானே நிகழ்வதுதான் இசை. அது உருவாக்கப்படுவது அல்ல.

கர்னாடக இசையில் சுமார் 90 ஆண்டுகளாக மிகப்பெரிய ஆளுமைகள் உருவாவதற்கு மியூசிக் அகாடமி காரணமாக இருந்து வருகிறது. கர்னாடக இசைக்கு மியூசிக் அகாடமி செய்துவரும் சேவை அளப்பரியது. 91-வது ஆண்டில் நான் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதைப் பெற உள்ள சித்ரவீணை கலைஞர் ரவிகிரணின் இசை சாதனைகளைப் பாராட்டிய இளையராஜா, ‘தி இந்து’ வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை’ ரவிகிரணுக்கு வழங்கினார்.

ரவிகிரண் பேசும்போது, ‘‘சங்கீத கலாநிதி விருதுக்கு என்னை தேர்வு செய்த மியூசிக் அகாடமிக்கும், தேர்வுக் குழுவுக்கும் நன்றி. என் குருமார்கள், ரசிகர்கள், உடன் வாசிக்கும் பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையில் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த விருது ஊக்கமாக இருக்கும். என் சிஷ்யர்கள் உட்பட இசை பயிலும் அனைவருக்கும் ஓர் அறிவுரை. இடைவிடாத பயிற்சியே உங்களை முன்னேற்றும்’’ என்றார்.

மியூசிக் அகாடமி தலைவர் என். முரளி பேசும்போது, இசைக்கு இளையராஜா ஆற்றியுள்ள பங்களிப்புகளைப் பற்றியும் சித்ரவீணை ரவிகிரண் மழலை மேதையாக இருந்தபோதே கர்னாடக இசையில் சுடர்விட்டதையும், வளர்ந்த பிறகு, உலகம் முழுவதும் தனது இசை ஆளுமையைப் பரப்பியதையும் எடுத்துரைத்தார்.

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில், இந்தியாவின் கலைகளின் தலைநகராகத் திகழும் சென்னையும் இடம்பிடித்திருப்பதை முன்னிட்டு, மியூசிக் அகாடமியின் படம் பொறிக்கப்பட்ட சிறப்பு தபால் உறையை, சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் வெளியிட்டார்.

விழாவில் பிரபல இசைக் கலைஞர்கள் டி.வி.கோபாலகிருஷ்ணன், ஏ.கன்யாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x