Published : 28 Dec 2017 05:18 PM
Last Updated : 28 Dec 2017 05:18 PM

அரியலூர் அனிதாவின் சகோதரருக்கு அரசுப் பணி: நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்

அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் சதிஷ்குமாருக்கு தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை முதல்வர் பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், "இன்று (28.12.2017) தலைமைச் செயலகத்தில், அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த அனிதாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக 7 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தந்தையிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

மேலும், அனிதாவின் சகோதரர் சதிஷ்குமாருக்கு தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 1.9.2017 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க, அனிதாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக 7 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று அவரது தந்தை சண்முகத்திடம் வழங்கினார். மேலும், அவரது சகோதரர் சதிஷ்குமாருக்கு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் (டாம்ப்கால்) இளநிலை உதவியாளராக பணியமர்த்தம் செய்து, அதற்கான பணிநியமன ஆணையினை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x