கரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

கரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: ‘கரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த பொண்ணுப்பிள்ளை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் நாகு, மேலூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்தார். கடந்த 2020-ல் கரோனா பரவலின் போது துப்பரவு பணியில் ஈடுபட்ட என் கணவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தார். என் கணவர் இறப்புக்கு நகராட்சி சார்பில் ரூ.50 ஆயிரம் மட்டும் இழப்பீடாக வழங்கப்பட்டது. என் கணவர் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மனு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் கருணாநிதி வாதிடுகையில், கரோனா காலத்தில் முன்களப்பணியாளராக பணிபுரிந்த மனுதாரரின் கணவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரோனா காலத்தில் முன்களப் பணியாளராக பணிபுரிந்து அதே கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு போதுமானது இல்லை. கூடுதல் இழப்பீடு கோரி மனுதாரர் மனு அளித்தும் நகராட்சி ஆணையம், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

உயிரிழந்த முன்களப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதை மறுப்பதையும், தாமதப்படுத்துவதையும் ஏற்க முடியாது. கரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளரின் ஆன்மாவுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இதனால் மனுதாரருக்கு உரிய இழப்பீடு வழங்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in