கோடநாடு வழக்கு | பழனிசாமிக்கு எதிராக உதயநிதி கருத்து கூற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு

எடப்பாடி பழனிசாமி (இடது), உதயநிதி ஸ்டாலின் (வலது)
எடப்பாடி பழனிசாமி (இடது), உதயநிதி ஸ்டாலின் (வலது)
Updated on
1 min read

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை வரும் நவம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் உதயநிதி செப்டம்பர் 7-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து நான் தேடிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார். அவரது அறிக்கை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளன. எனவே, என்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உதயநிதி கருத்துகளை தெரிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட, வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதுவரை, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உதயநிதி கருத்துகளை தெரிவிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in