புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயிலின் 54,000 சதுர அடி நிலத்தை மீட்கக் கோரி இண்டியா கூட்டணி பேரணி

புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயிலின் 54,000 சதுர அடி நிலத்தை மீட்கக் கோரி இண்டியா கூட்டணி பேரணி
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணியை துரிதமாக்கக் கோரி இண்டியா கூட்டணியினர் பேரணியாக சென்று தலைமைச் செயலரிடம் மனு தந்தனர்.

புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள 54 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஒரு கும்பல் போலிப் பத்திரம் தயாரித்து மோசடி செய்தது. கோயில் நில அபகரிப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 3 அரசு அதிகாரிகள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. அபகரிக்கப்பட்ட கோயில் நிலத்தை கையகப்படுத்தி, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் நிலத்தை மீட்கக் கோரியும், சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். ஊர்வலத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ, எதிர்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ, திமுக அவைத் தலைவர் எஸ்பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊர்வலம் மிஷன் வீதி, அம்பலத்தடையார் வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றது. ஊர்வலத்தை ஆம்பூர் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘கோயில் நிலத்தை அபகரித்த குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது. உயர் நீதிமன்றம் கண்டனத்துக்கு உள்ளான பாஜக எம்எல்ஏக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை கையகப்படுத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். புகழ்பெற்ற கோயில்களின் சொத்துகள், ஆபரணங்கள், நிலங்களை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தனியாரால் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட திருபுவனை ஸ்பின்னிங் மில் நிலத்தை திரும்பப்பெற வேண்டும். நில அளவை பதிவேடு துறையை புனரமைக்க வேண்டும்’ என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், "புதுவையில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிப்பது இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. காமாட்சியம்மன் கோயில் நில விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு இதற்கான பணியை தொடங்கவில்லை. தீர்ப்பை அமல்படுத்தாத அரசு மீது உயர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் மனு அளிக்க உள்ளோம்" என்றார்.

அதைத் தொடர்ந்து இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தலைமை செயலகம் சென்றனர். அங்கு தலைமைச் செயலர் (பொறுப்பு) ஜவகரிடம் மனு தந்தனர். விரைவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு தரவுள்ளதாக தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in