

சென்னை:அதிமுகவை பற்றி இனி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் எச்.ராஜா, மைத்ரேயன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில அணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உடல் நலம் சரியில்லாததால் முககவசம் அணிந்தவாறு வந்த அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, மாற்றுத்திறனாளி தொண்டருக்கு இலவச 3 சக்கர மிதிவண்டியை அண்ணாமலை வழங்கினார். இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும், தமிழகத்தில் பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும், கட்சி எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வழங்கினார்.
கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ‘கூட்டணி பற்றி எந்த கவலையும் எனக்கு இல்லை. நீங்களும் கவலை பட வேண்டாம். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பதற்காக செயலாற்றுங்கள். மோடி தலைமை வேண்டாம் என்பவர்கள் வெளியேறுகிறார்கள். மோடி வேண்டும் என்பவர்கள் கட்சியில் இணைகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு பூத்தையும் வலிமையானதாக மாற்ற வேண்டும்.
அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. மத்திய அரசு திட்டத்தால் பயனடைந்தவர்களை தொடர்பு கொண்டு, அவர்களை கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2024 தேர்தலில் தமிழகத்தில் இருந்து தே.ஜ. கூட்டணி அதிகளவிலான உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும். பாஜகவை வளர்ப்பதே எங்கள் நோக்கம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும். அதில், தமிழகத்தின் 39 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
`அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்’
கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, எந்த இடத்திலும் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் அதிமுகவை பற்றி இனி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் அண்ணாமலை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனவரி 2-வது வாரத்தில் சென்னையில் நடைபெறும் நடைபயண நிறைவு நாளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அதில் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.