

ஈரோடு/திருவள்ளூர்: சவீதா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய சுமார் 40 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் செயல்படும் சவீதா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனையின் நிறுவனர் வீரய்யன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை பூர்வீகமாகக் கொண்ட இவரின் வீடு, ஈரோடு சம்பத் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் கீழ் தளத்தில் எம்.எம்.இந்தியா மெடிக்கல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து நேற்று இந்த வீட்டுக்கு வந்த வருமான வரி அதிகாரிகள் 6 பேர், சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த காவலாளியின் குடும்பத்தினர், ‘வீட்டின் உரிமையாளர் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறிவிட்டதாகவும், இங்கு வருவதில்லை’ என்றும் தெரிவித்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் வீட்டில் மாலை வரை வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று, தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி, பூந்தமல்லி வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த கல்வி நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததால், சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த குழுமத்துக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த தகவலை வருமான வரித்துறையினர் உறுதி செய்யவில்லை.
இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியிலும் நேற்று வருமான வரி சோதனை நடந்தது. 50-க்கும் மேற்பட்டோர் அடங்கிய அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6 மணியை தாண்டியும் சோதனை நீடித்தது. இக்கல்லூரியில் பராமரிப்பு பொறியாளராக பணிபுரியும் பிரவீன் குமார் மற்றும் கணக்காளராக பணிபுரியும் கார்த்திக் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.