Published : 06 Oct 2023 05:22 AM
Last Updated : 06 Oct 2023 05:22 AM
சென்னை/கடலூர்: ராமலிங்க வள்ளலார் தற்போது இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை மனதாரப் பாராட்டிஇருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில், வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வள்ளலார் சிலையை திறந்துவைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அணையா தீபத்தை ஏற்றினார்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பேசியதாவது:
உயர் மதிப்பைப் பெற்ற வள்ளலாரின் ஆன்மிக கருத்துகள், இப்போதும் உலக மக்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. சகமனிதர்கள் மீது அன்பு செலுத்துவது, பசியைப் போக்குவதே வள்ளலாரின் முக்கியப் பணியாக இருந்தது.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கருத்தே, நமது கொள்கையாகும்.
நவீன கல்வித் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்த வள்ளலார், தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டுமென விரும்பினார். இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் பெரிய அளவில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய சிந்தனை, வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை, சிறந்த மாற்றங்களை உருவாக்கும்.
சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென வலியுறுத்திய வள்ளலார் தற்போது இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை மனதாரப் பாராட்டியிருப்பார். இவ்வாறு பிரதமர் பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “வள்ளலாரின் கருத்துகள், பாரதத்தின் கருத்தை, அடையாளத்தை வலுப்படுத்துவதாக உள்ளன. ஐரோப்பிய நாடுகள் சொல்வதுபோல, பாரத நாடுஅரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்ட நாடு அல்ல. இதையெல்லாம் விட பெரியது. அதேநேரத்தில், இந்தியா என்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் அம்பேத்கர் இந்தியாஎன்பதற்குப் பதிலாக பாரதம்என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “80 கோடி பேருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்கும் சனாதனத்தை, யாராலும் ஒழிக்க முடியாது” என்றார்.
விழாவில், ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, உமன்ஸ் லீக் அறக்கட்டளை நிறுவனர் திவ்யா ஸ்வப்னா ராஜ், காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் , வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாக் குழுத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வள்ளலார் முப்பெரும் விழா: வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது ஆண்டு, தர்மசாலை தொடங்கிய 156-வது ஆண்டு, ஜோதி தரிசனம் காட்டிய 152-வதுஆண்டு ஆகிய முப்பெரும் விழாவின் நிறைவு விழா கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, குழந்தைகளால் ஜோதி ஏற்றப்பட்டு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. தர்ம சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற அருள்நெறி பரப்புரை பேரணி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT